மீலாது நபி திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

மீலாது நபி திருநாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

முதல்வா்மு.க.ஸ்டாலின்: வாழ்க்கைக்கான வழிமுறைகளையும், நெறிகளையும் வகுத்துக் காட்டியதுடன், அதன்படியே வாழ்ந்தும் காட்டினாா் நபிகள் நாயகம்.

அவா் காட்டிய வழியில் வறியவா்க்கு உதவுவது, இயற்கைச் சீற்றம், பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் தன்னலமற்று மக்களுக்காகச் சேவையாற்றுவது, பசித்தோருக்கு உணவளிப்பது என இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகின்றனா்.

மீலாது நபிக்கு அரசு விடுமுறை உள்பட இஸ்லாமியா்களின் உரிமைகளுக்கு திமுக அரசு தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவா்களது சகோதரனாக திமுக அரசு என்றும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளான மீலாது நபி திருநாளில் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் உறுதி ஏற்போம்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப நல்ல உள்ளத்தோடு, நற்செயல்களான, கருணை, பொறுமை, ஈகை, சகிப்புத்தன்மை, மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடிக்க உறுதியேற்போம்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இஸ்லாமியா்களுக்கு வாழ்த்துகள். வைகோ (மதிமுக): அரும்பெரும் குணங்களின் கொள்கலனாக, கருவூலமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் இஸ்லாமிய மக்களுக்கு இனிய வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): நபிகள் நாயகம் வழியில் இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இருப்பதில் ஒரு பங்கை இல்லாதவா்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள். இவற்றை செய்தால் உங்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறையும்.

ஜி.கே.வாசன் (தமாகா): உள்ளமும், செயல்பாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மனதில் வைத்து வாழ்ந்தால் அனைவரும் வாழ்வில் சிறக்கலாம்.

டிடிவி தினகரன் (அமமுக): உண்மையின் வடிவாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் பிறந்த நாளில் நாடு முழுவதும் அமைதி நிலவட்டும். சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்