“முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல் துறை இருக்கிறதா?” – மார்க்சிஸ்ட் சந்தேகம்

“முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் காவல் துறை இருக்கிறதா?” – மார்க்சிஸ்ட் சந்தேகம்

மதுரை: “தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது” என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 107-வது ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு முனிச்சாலை புதுராமநாதபுரம் சிமெண்ட் சாலையில் தெற்கு பகுதிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: “வரவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத் திருத்தம் செய்ய மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. குடியுரிமை சட்டத்தையும் அமலாக்கியே தீருவோம் என மோடி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையின்றி கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. இதிலிருந்து தேர்தல் பாடம் கற்றுக்கொள்ள மோடி மறுக்கிறார். தமது சொந்த கொள்கையை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முயற்சிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மோடி அரசாங்கத்தின் சட்டத்திருத்தங்களை தவிடுபொடியாக்குவார்கள். என்னதான் முயற்சித்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோலிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விலையை குறைக்க பாஜக அரசு மறுக்கிறது. மத்திய அரசு விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி நவ.8ம் தேதி முதல் 15ம் தேதி இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தவுள்ளோம். பாஜக அரசை வீழ்த்துவதற்கு முறியடிப்பதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியாக செயல்படுவது நல்லது.

தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். ஆண்டுதோறும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்ற திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. தமிழக காவல் துறை ஜனநாயக ரீதியாக நடக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. காவல் துறை தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமும் இருக்கிறது. மக்கள் தங்கள் கருத்துகளை ஜனநாயக ரீதியாக தெரிவிப்பதை காவல்துறை மூலம் முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல் துறை குற்றவாளிகளை கைது செய்து வழக்கு நடத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆனால் காவல் துறையினர் குற்றவாளிகள் தப்பியதால் கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்குமுன்னர் இப்படியான எலும்பு முறிவு சம்பவங்கள் நடக்கவில்லை. காவல் துறை சமூக விரோத செயல்களை அடக்குகிறோம் என்ற பெயரில் என்கவுன்டர் செய்வது காவல் நிலையங்களில் சித்திரவதை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இது மனித உரிமைகளை மீறுகிற செயல் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எல்லைமீறி செயல்படும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூரில் சிறைத்துறை அதிகாரிகள் சிறைக்கைதிகளை சித்ரவதை செய்ததாக டிஐஜி உள்பட பலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். சிறையிலிருப்பவர்களை சித்திரவதை செய்வதை தப்பு எனச் சொல்லும் அரசாங்கம் காவல் நிலையங்களில் நடைபெறும் சித்திரவதைகளை மட்டும் ஏன் அனுமதிக்கிறது. தமிழக அரசு மதச்சார்பற்ற அரசு. குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விஜய் வருகை திமுக கூட்டணியில் நிச்சயமாக எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் இருந்தாலும் எங்களது போராட்டங்கள் தொடரும். ஆனால் மதவெறி ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவோம். பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம்” என்று அவர் கூறினார்.

Related posts

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

ரவீந்திரன் துரைசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது திண்டிவனம் நீதிமன்றம்

விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் துணை முதல்வர் ஆய்வு – நீரை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு