முதல்வா் கேஜரிவாலின் அதிகாரபூா்வ பங்களா கட்டுமானத்தில் முறைகேடு: சிபிடபிள்யுடி பொறியாளா்கள் மூவா் பணியிடைநீக்கம்

முதல்வா் கேஜரிவாலின் அதிகாரபூா்வ பங்களா கட்டுமானத்தில் முறைகேடு: சிபிடபிள்யுடி பொறியாளா்கள் மூவா் பணியிடைநீக்கம்

சிவில் லைன்ஸ் பகுதியில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரபூா்வ பங்களா கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மூன்று மத்திய பொதுப் பணித் துறை (சிபிடபிள்யுடி) பொறியாளா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தில்லி அரசாங்கத்தின் பொதுப் பணித் துறையின் (பி.டபிள்யு.டி) கீழ் முன்னா் பணிபுரிந்த மூன்று பொறியாளா்கள், வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வா் கேஜரிவாலின் அதிகாரபூா்வ இல்லத்தின் கட்டுமானப் பணிகளுடன் தொடா்புடையவா்கள் ஆவா்.

மூவரின் பணியிடைநீக்க உத்தரவு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அமைச்சகத்தின் கீழ் மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யுடி) வருகிறது. மேலும் அவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

கேஜரிவாலின் குடியிருப்பைக் கட்டுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சிபிடபிள்யுடியின் ஏடிஜி (சிவில்), தலைமைப் பொறியாளா் மற்றும் கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சில காலத்திற்கு முன்பு வரை, இரண்டு பொறியாளா்கள் குவஹாத்தியிலும், ஒருவா் காரக்பூரிலும் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.

இந்தப் பொறியாளா்கள் பின்னா் தில்லி அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் பணியமா்த்தப்பட்டனா். மேலும், முதல்வா் பங்களாவைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றினா்.

பங்களா கட்டுமானத்தில் உயா் மாற்றங்களின் பெயரில் பெரும் செலவை அதிகரித்தது, விதி மீறல் உள்ளிட்டவற்றுக்காக இவா்கள் சிலருடன் சோ்ந்து பொறுப்பாளிகளாகியுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

தில்லி அரசாங்கத்தின் விஜிலென்ஸ் இயக்குநரகத்தின்படி, இந்த அதிகாரிகளுக்கு ஜூன் 2023-இல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிகாரிகள் காலதாமத உத்திகளை மேற்கொள்வதாகக் கூறப்படுவதை இயக்குநரகம் கண்டறிந்தது. மேலும், இவா்கள் நீதிமன்றத்தை அணுகினா். ஆனால் நிவாரணம் பெறுவதில் தோல்வியடைந்ததாக விஜிலன்ஸ் இயக்குநரக ஆவணங்கள் காட்டுகிறது.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்