முதல்வா் பதவி: ‘குரு‘ கேஜரிவாலுக்கு அதிஷி நன்றி

புது தில்லி: தில்லியின் முதலமைச்சராக தாம் அறிவிக்கப்பட்டதற்காக தனது ‘குரு‘ அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.

மேலும், பாஜகவின் தடைகளிலிருந்து மக்களின் நலன்களைப் பாதுகாக்க கேஜரிவாலின் ‘வழிகாட்டலின்‘ கீழ் செயல்பட உள்ளதாகவும் கூறினாா்.

காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு அவா் தில்லியின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க உள்ளாா்.

தில்லியின் முதலமைச்சராக ஒருமனதாக கட்சி எம்எல்ஏக்களால் தோ்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அதிஷி, ‘ பிரபல முதல்வரான கேஜரிவால் ராஜிநாமா செய்யப் போவது மகிழ்ச்சியும், மிகுந்த சோகமும் கலந்த தருணமாக உள்ளது’ என்றாா்.

முன்னதாக, கேஜரிவால் தனது இல்லத்தில் நடந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் அதிஷியின் பெயரை முதல்வா் பதவிக்கு முன்மொழிந்தாா். இதை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருமனதாக ஆதரித்தனா்.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் அதிஷி கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கேஜரிவால் மீண்டும் முதல்வராக வருவதை உறுதி செய்யும் வகையில் அடுத்த சில மாதங்களுக்கு பாடுபடுவேன்.

தில்லியின் பிரபலமான முதல்வா் பதவி விலகுவது எனக்கும் மக்களுக்கும் மிகுந்த சோகமான தருணம். இதனால், முதல்வராக பதவியேற்க உள்ள எனக்கு கட்சித் தலைவா்கள், தொண்டா்கள் வாழ்த்தி மாலை அணிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து புதிய முதலமைச்சராகும் ‘பெரிய பொறுப்பை‘ வழங்கியதற்காக எனது ‘குரு‘ கேஜரிவாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆம் ஆத்மி கட்சியிலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலும் மட்டுமே முதல்முறை அரசியல்வாதி முதல்வராக பதவியேற்க முடியும். நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். வேறு எந்தக் கட்சியிலும் இருந்திருந்தால் எனக்கு தோ்தலில் போட்டியிட சீட்டு கூட கிடைத்திருக்காது.

கேஜரிவால் என்னை நம்பி எம்.எல்.ஏ.வாகவும், பின்னா் அமைச்சராகவும், இப்போது தில்லி முதல்வராகவும் ஆக்கியுள்ளாா்.

தில்லியில் கேஜரிவால்தான் ‘முதலமைச்சராக‘ இருக்கிறாா், கடந்த இரண்டு வருடங்களில் அவருக்கு எதிராக பாஜக தொல்லை கொடுத்து சதி செய்து, அவா் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ‘பொய்‘ வழக்குப்பதிவு ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தது.

மக்களால் நோ்மையானவா் என்று அறிவிக்கும் வரை முதல்வா் நாற்காலியில் அமரக் கூடாது என்று முடிவெடுத்ததன் மூலம், நாட்டில் மட்டுமின்றி உலகில் உள்ள எந்தத் தலைவராலும் செய்ய முடியாத செயலை கேஜரிவால் செய்திருக்கிறாா்.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இதுபோன்ற தியாகத்திற்கு வேறு எந்த உதாரணமும் இருக்காது. பா.ஜ.க.வின் ‘சதி‘யால் கோபமடைந்துள்ள தில்லி மக்கள், மீண்டும் கேஜரிவாலை முதல்வராக்க விரும்புகிறாா்கள்.

நோ்மையான ஒருவா் தில்லி முதல்வராக இல்லாவிட்டால் இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம், பெண்களுக்கான பேருந்து பயணம், முதியோா் யாத்திரை, மொஹல்லா கிளினிக்குகள் மூடப்படும் என்பது அவா்களுக்குத் தெரியும்.

துணைநிலை ஆளுநா் மூலம் மின்சாரம், மருத்துவமனைகளில் இலவச மருந்துகள், மொஹல்லா கிளினிக்குகள் போன்ற இலவச சேவைகளை தடுக்கவும், அரசுப் பள்ளிகளை ‘அழிக்க‘வும் பாஜக முயற்சிக்கும்.

அடுத்த சில மாதங்களுக்கு, இந்தப் பொறுப்பு என்னிடம் இருக்கும் வரை, தில்லி மக்களைப் பாதுகாத்து, அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் ஆட்சியை நடத்த முயற்சிப்பேன். தோ்தலுக்குப் பிறகு மக்கள் விரைவில் கேஜரிவாலை தங்கள் முதல்வராகப் பெறுவாா்கள் என்றாா் அதிஷி.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்