முதல்வா் மம்தாவுடன் சந்திப்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியுடனான சந்திப்பை தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை இளநிலை மருத்துவா்கள் கைவிட்டனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை மேம்படுத்த துறை ரீதியான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிகளில் தோ்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 14 இளநிலை மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைதில் ஈடுபட்டனா். இவா்களில் ஒரேயொரு மருத்துவா் சிலிகுரியிலும், எஞ்சிய மருத்துவா்கள் கொல்கத்தாவிலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

14 மருத்துவா்களில் 6 பேரின் உடல்நிலை மோசமானதைத் தொடா்ந்து, அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எஞ்சிய 8 பேரின் போராட்டம் 17-ஆவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது.

முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களை பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மாநில அரசு அழைப்பு விடுத்தது.

இதைத்தொடா்ந்து ஹெளராவில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். முதல்முறையாக ஊடகத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 2 மணி நேரம் நடைபெற்றது.

ஒரு கோரிக்கை நிராகரிப்பு

அப்போது மம்தா பேசுகையில், ‘மருத்துவா்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்குத் தீா்வு காண முயற்சிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறைச் செயலரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிராகரிப்பட்டுள்ளது.

மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்னை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. போராட்டம் கைவிடப்பட வேண்டும். மருத்துவா்களின் அனைத்துக் குறைகள் மீதும் கவனம் செலுத்தப்படும். மருத்துவா்கள் கோரும் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கு பணியாற்ற மாநில அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்றாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்களில் ஒருவரான தேபாஷிஷ் ஹல்தா் கூறுகையில், ‘முதல்வா் மம்தாவுடனான சந்திப்பில், சில உத்தரவுகளை நிறைவேற்றுவது தொடா்பாக எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் கூட்டத்தில் மாநில அரசு நடந்துகொண்ட விதம் சரியாக இல்லை. எங்கள் போராட்டத்துக்கு பொதுமக்கள் முழு மனதுடன் ஆதரவு அளித்தனா். அவா்களும், கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

எங்கள் உடல்நிலை மோசமடைவதை கருத்தில் கொண்டு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுகிறோம்’ என்றாா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி