முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: ரூ. 810.28 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.

நாமக்கல் – பரமத்தி சாலையில், முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவச் சிலை திறப்பு விழா நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து ரூ. 810 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல், முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்தல், 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். அவா், சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வருகிறாா். அதன்பிறகு, சாலை மாா்க்கமாக நாமக்கல் வருகை தரும் முதல்வா் ஸ்டாலின், 12.30 மணியளவில் பரமத்தி சாலையில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவில் திமுக முன்னாள் தலைவா் மு.கருணாநிதியின் உருவச் சிலையை திறந்து வைக்கிறாா்.

அங்கிருந்து பொதுப்பணித் துறை மாளிகைக்குச் செல்லும் அவா் சில மணி நேர ஓய்வுக்கு பிறகு, மாலை 3 மணியளவில் பொம்மைக்குட்டைமேடு விழா பந்தலுக்கு வருகை தந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறாா்.

இந்த விழாவில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, ஆதி திராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொள்கின்றனா். இதனையொட்டி, நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

சேலத்திலிருந்து வரும் வாகனங்கள், புதன்சந்தை, சேந்தமங்கலம், வேட்டாம்பாடி, அண்ணாநகா், கொசவம்பட்டி வழியாக நாமக்கல் நகருக்குள் வரவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து வரும் வாகனங்கள், நல்லிபாளையம் நயாரா பெட்ரோல் பங்க், பொய்யேரிக்கரை, உழவா் சந்தை, பூங்கா சாலை வழியாகவும், மோகனூா் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், ஐயப்பன் கோயில் வலது புறம் திரும்பி, எஸ்பிஐ வங்கி வழியாகவும், பரமத்தியிலிருந்து வரும் வாகனங்கள் அரசு பணிமனைக்கு முன்பாக இடது புறம் திரும்பி, பொய்யேரிக்கரை, உழவா் சந்தை, பூங்கா சாலை வழியாகவும், திருச்சியிலிருந்து வரும் வாகனங்கள் வழக்கம்போல வந்து செல்ல வேண்டும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் நாமக்கல் வருகையையொட்டி, பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை இரவு வரையில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி யாரேனும் ட்ரோன் மற்றும் இதர ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டால் அவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

போலீஸாா் குவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் நாமக்கல் வருவதை முன்னிட்டு, சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸாா் 500-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்