முதல் டெஸ்ட் போட்டி; 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 154 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 117.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 357 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் தெம்பா பவுமா 86 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 67 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 13 ரன்னுடனும், கவேம் ஹாட்ஜ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடந்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 91.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீசி கார்டி 42 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டோனி டி ஜோர்ஜி மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கினர். இந்த இணை விக்கெட் விழாமல் பார்த்து கொண்டது.

இறுதியில் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இதுவரை 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி