முதல் டெஸ்ட்: மூவர் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டு வரும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (அக்டோபர் 16) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

46 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இரண்டாம் நாளான நேற்று (அக்டோபர் 17) ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் ரிஷப் பந்த் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: பாபர் அசாமுக்கு மாற்று வீரராக களமிறங்கியவர் அசத்தல்; பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு!

நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வில்லியம் ஓ’ரூர்கி 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ரச்சின் ரவீந்திரா சதம், நியூசி – 402/10

இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தினார். அவர் 157 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டெவான் கான்வே அதிகபட்சமாக 91 ரன்களும், டிம் சௌதி 65 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: கேமரூன் கிரீன் அணியில் இல்லாதது ஆஸி.க்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மிட்செல் ஸ்டார்க் பதில்!

நல்ல தொடக்கம்

முதல் இன்னிங்ஸில் மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஜெய்ஸ்வால் 35 ரன்கள் எடுத்தும், ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, விராட் கோலி மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இருப்பினும், விராட் கோலி 70 ரன்களில் கிளன் பிளிப்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதையும் படிக்க: 1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 125 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது