முதல் டெஸ்ட்: வங்கதேசத்தின் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற வங்கதேசத்துக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகின்றன.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியின் தரப்பில் ஹாசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஜடேஜா மீது எப்போதும் பொறாமை கொள்கிறேன்: ரவிச்சந்திரன் அஸ்வின்

149 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்

இந்திய அணி 376 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மெஹிதி ஹாசன் மிராஸ் 27 ரன்களும், லிட்டன் தாஸ் 22 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய சாதனை!

சதம் விளாசிய ரிஷப் பந்த், ஷுப்மன் கில்

308 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ரிஷப் பந்த் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் 119 ரன்களுடனும் (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்), கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் (4 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.

515 ரன்கள் இலக்கு

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, வங்கதேசத்துக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. ஜாகிர் ஹாசன் 33 ரன்களிலும், ஷாத்மன் இஸ்லாம் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் 300-வது விக்கெட்டை வீழ்த்த நல்ல வாய்ப்பு: ஜடேஜா

இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர். போட்டியின் கடைசி இரண்டு நாள்களில் வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகின்றன.

Related posts

Mumbai Crime: 32-Year-Old Man Arrested For Murdering Wife After Fabricating Suicide Story In Cuffe Parade

Editorial: Lower Passing Marks, Higher Consequences

Let’s Not Delude Ourselves: Canada After All Is The 51st State Of The USA