முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா (புள்ளிவிவரங்கள்)

முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா (புள்ளிவிவரங்கள்)அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.படம் | AP

அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வெறும் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது தென்னாப்பிரிக்க அணி. 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 8.5 ஓவர்களில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த அரையிறுதிப் போட்டிக்குப் பிறகான புள்ளிவிவரங்கள் பின்வருமாறு

உலகக் கோப்பைத் தொடரில் (ஒருநாள் மற்றும் டி20) முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 1998 ஆம் ஆண்டு ஐசிசியின் நாக் அவுட் டிராஃபியின் இறுதிப்போட்டிகு முன்னேறி, வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்று, டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா சமன் செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு (கடைசி 3 போட்டிகள்) மற்றும் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ( முதல் 5 போட்டிகள்) என தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா தற்போது சமன் செய்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2009 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பதிவு செய்திருந்ததே அதன் அதிகபட்ச தொடர்ச்சியான வெற்றியாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே, சர்வதேச டி20 போட்டிகளில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச டி20 போட்டிகளில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆட்டமிழந்ததே சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக, நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன்களாக இருந்தது.

56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆட்டமிழந்ததே டி20 உலகக் கோப்பைத் தொடரின் நாக் அவுட் போட்டிகளில் ஒரு அணி குவித்த குறைந்தபட்ச ரன்களாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்ததே நாக் அவுட் போட்டிகளில் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 67 பந்துகள் மீதமிருக்க தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பந்துகள் மீதமிருக்க தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் போட்டி இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 130 ரன்கள் என்ற இலக்கை 51 பந்துகள் மீதமிருக்க துரத்தியதே, அதிக பந்துகள் மீதமிருக்க தென்னாப்பிரிக்க அணி பெற்ற வெற்றியாக இருந்தது.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் பந்துவீச்சாளர் ஒருவரால் கைப்பற்றப்படும் அதிக விக்கெட்டுகள் இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 16 விக்கெட்டுகள் கைப்பற்றியதே, டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் வீரர் ஒருவர் கைப்பற்றிய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது.

இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி ஒரு முறை கூட தோற்றதில்லை. இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 முறை உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி அந்தப் போட்டிகளில் வெற்றியே பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் (2010 & 2016) இரண்டு வெற்றிகள், 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் (2019 & 2023) இரண்டு வெற்றிகள்.

இதுவரை ஆப்கானிஸ்தான் அணி 22 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளது. தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய மூன்று அணிகளிடம் மட்டும் இன்னும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு