முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல்வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக்கூறி தனியாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை அவரைகடந்த ஜூன் மாதம் கைது செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனாபானு மற்றும் அவருடைய சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்தும், தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரியும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி் முன்பாக நேற்று நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ஏ.ரமேஷ், ‘‘அமலாக்கத் துறையின் வழக்கில் அமீனா பானுவின் பெயர் இடம்பெறவில்லை. மனுதாரர்கள் இருவரும் ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகி தேவையான விவரங்களை வழங்கிவிட்டதால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்றார்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், “அவர்கள் இருவரும் அமலாக்கத் துறை வழக்கில் ஜாபர்சாதிக் கைது செய்யப்படும் முன்பாகத்தான் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' என வாதிட்டார். அதையேற்ற நீதிபதி, மனுதாரர்கள் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டுள்ளார்.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்