முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர், பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அக்கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் (76) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

திமுகவின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சராகவும், 1996 – 2001 திமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார். கடந்தாண்டு திமுக முப்பெரும் விழாவில் க.சுந்தரத்திற்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அண்ணா விருது' வழங்கி கவுரவித்தார்.

முன்னள் அமைச்சர் சுந்தரம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீஞ்சூரில் மறைந்த முன்னாள் அமைச்சர் சுந்தரம் உடலுக்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுந்தரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், "திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். க.சுந்தரம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றியவர். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த க. சுந்தரம், கழகம் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீஞ்சூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த காட்சிகள் இப்போதும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் க.சுந்தரம் அவர்களது கழகப் பணிகளைப் பாராட்டி அண்ணா விருதினையும் வழங்கியிருந்தேன். கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க.சுந்தரம் அவர்களது மறைவு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say