முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடிப்பு… மனைவி உயிரிழப்பு

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார். கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாய்குல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் யம்தோங் ஹாக்கிப் (64 வயது). இவர் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இவரது மனைவி சபம் சாருபாலா (59 வயது). இவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டில் இருந்த குப்பைகளை எரித்துள்ளார். அப்போது திடீரென அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக யம்தோங் இன்று காலை போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக நிலம் வாங்கியது தொடர்பாக ஹாக்கிப்புக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர்கள் நாட்டு வெடிகுண்டை குப்பைக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்தபோது ஹாக்கிப்பும் வீட்டில்தான் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்