முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை: மத்திய மந்திரி அதிரடி உத்தரவு

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணிப்பதை தடுக்க வேண்டும் என ரெயில்வே அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு முன்பதிவு பெட்டியில் முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் வைத்திருந்த ஏராளமான வடமாநில பயணிகள் ஏறினர். முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட அந்த முன்பதிவு பெட்டியில் ஏற முடியாத அளவுக்கு வாசலில் முண்டியடித்தபடி அவர்கள் நின்றனர். இதன்காரணமாக அந்த பெட்டியில் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பயணிகள் ரெயிலில் ஏற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன் காரணமாக பல பயணிகள் தங்களது பயணத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பயணிகள் தொடந்து புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் வரை சென்றது. இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து தென்னக ரெயில்வே அதிகாரிகளிடம் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டறிந்ததாகவும், இதன்பின்பு அனைத்து கோட்ட ரெயில்வே பொது மேலாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனையின் போது முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முன்பதிவு பெட்டிகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரெயில்வே அதிகாரிகளுக்கு அவர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து, எந்தெந்த ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதுபோன்ற ரெயில்களில் கூடுதல் பயணச்சீட்டு ஆய்வாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை பணி அமர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பதிவு பெட்டிகளில் சாதாரண பயணிகள் பயணம் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த நிறுத்தத்தில் அவர்களை ரெயிலில் இருந்து இறக்கி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட், சீசன் டிக்கெட், முன்பதிவு செய்யப்பட்ட காத்திருப்போர் டிக்கெட் போன்றவற்றை வைத்திருக்கும் பயணிகள் எக்காரணத்தை கொண்டும் முன்பதிவு பெட்டிகளில் ஏறக்கூடாது என ரெயில் புறப்படும் இடங்களில் தொடர்ந்து விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!