மும்பை அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாடில் இருந்து மும்பைக்கு நேற்று அதிகாலை 6.02 மணிக்கு 22 பெட்டிகளுடன் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயில் நேற்று காலை 8.36 மணிக்கு மும்பை அருகே உள்ள கசாரா ரெயில் நிலையம் வந்தடைந்தது. அங்கு இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் இருந்து 4 மற்றும் 5-வது பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு கழன்றது. இதனால் என்ஜினுடன் முதல் 4 பெட்டிகள் மட்டும் சென்றன.

பெட்டிகள் கழன்று ஓடியதை கவனித்த என்ஜின் டிரைவர் சுதாரித்து கொண்டு ரெயிலை நிறுத்தினார். இதன் காரணமாக தனியாக கழன்று ஓடிய பெட்டிகள், முன்னாள் சென்ற என்ஜின், பெட்டிகள் மீது மோதாமல் சிறிது தூரத்தில் நின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். சம்பவத்தின்போது ரெயில் குறைந்த வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முன்னாள் சென்ற என்ஜின் மற்றும் பெட்டிகள் பின்னோக்கி கொண்டு வரப்பட்டது. பின்னர் கழன்ற 4, 5-வது பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. அதன்பிறகு அங்கு இருந்து ரெயில் புறப்பட்டது. பெட்டிகள் கழன்ற சம்பவத்தால் மன்மாட் – மும்பை சி.எஸ்.எம்.டி. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக அங்கு இருந்து புறப்பட்டது. ரெயில் பெட்டிகள் கழன்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்