மும்பை: ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்

மும்பை,

மும்பையில் இயங்கி வரும் ஐ.ஐ.டி. கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கடந்த மார்ச் 31-ந்தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் 'ராவோஹன்' என்ற பெயரில் ராமாயண நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த நாடகத்தில் பெண்ணியவாத கருத்துகளை முன்வைப்பதாக கூறி, ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களையும், இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தியுள்ளனர் என மாணவர்கள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் 'ஐ.ஐ.டி. (பி) பாரத்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த நாடகம் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, மாணவர்கள் தங்களுக்கு கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கடவுள் ராமரையும், ராமாயணத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம்சாட்டினர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஐ.ஐ.டி. மாணவர்களின் நாடகத்திற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய 4 மாணவர்களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் ஜிம்கானா விருதுகளை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஜூனியர் மாணவர்களுக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதி வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?