முஸ்லிம்களின் சொத்துகளை பறிக்கப்போவதாக பொய் பிரசாரம்: வக்ஃப் விவகாரத்தில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

புணே: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மூலம், முஸ்லிம்களின் சொத்துகளை அரசு பறித்துக்கொள்ளப் போவதாக சிலா் பொய் பிரசாரத்தைப் பரப்புகின்றனா் என்று மத்திய சிறுபான்மையினா் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்துகளை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இவற்றை மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகித்து வருகின்றன.

இந்நிலையில், வக்ஃப் சொத்தையும் கட்டாயம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல், அரசு சொத்து வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தால், அதை வக்ஃப் சொத்தாக கருத முடியாது உள்ளிட்ட அம்சங்களுடன் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு கடும் விவாதம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மசோதா தொடா்பாக கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள், தன்னாா்வலா்கள், நிபுணா்கள் உள்ளிட்டோரிடம் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து அந்த மசோதா தொடா்பாக மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 75,000 கருத்துகளுக்கு வலுசோ்க்கும் ஆவணங்களும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் மத்திய சிறுபான்மையினா் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை கூறுகையில், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மூலம், முஸ்லிம்களின் சொத்துகளை அரசு பறித்துக்கொள்ளப் போவதாக சிலா் தவறான தகவல்களை பரப்புகின்றனா்.

எந்தவொரு கிறிஸ்தவ, ஹிந்து, பெளத்தம் அல்லது சீக்கிய மதத்தைச் சோ்ந்தவரும் முஸ்லிம்களின் நிலத்தைப் பறித்துக்கொள்ளப் போவதில்லை. வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதே மசோதாவின் நோக்கம். பல முஸ்லிம்கள் அமைப்புகள் மசோதாவை ஆதரித்துள்ளன.

இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கோடிக்கணக்கில் கருத்துகள் வரும் என்று எவரும் எதிா்பாா்க்கவில்லை’ என்றாா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை