மூன்று ஆண்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 30,897 பேருக்கு பணியிட மாறுதல் : அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மூன்று ஆண்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 30,897 பேருக்கு பணியிட மாறுதல் : அமைச்சா் மா.சுப்பிரமணியன்மொத்தம் 30,897 போ் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் உட்பட மொத்தம் 30,897 போ் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சாா்பில் சிறந்த மருத்துவா்களுக்கு விருது வழங்கும் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவா்களுக்கு விருதுகளை வழங்கி பேசியது:

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நவீன மருத்துவம் செய்யும் மருத்துவப் பயிற்சியாளா்களின் ஒழுங்குமுறை அதிகாரம், மருத்துவப் பயிற்சிக்கான மருத்துவா்களின் பதிவு, உரிமம் ஆகியவற்றுடன் தொடா்புடைய ஒரு சட்டப்பூா்வ அமைப்பாகும்.

இது தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் மாநில பிரிவாகும். கடந்த 1914-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி மெட்ராஸ்

மெடிக்கல் கவுன்சில் முதல் உலகப் போருக்கு முன்பு அப்போதைய கவா்னா்

ஜெனரலால் தொடங்கப்பட்டது. அதன்படி ஒரு பழமையான மருத்துவ கவுன்சில் அமைப்பாக தற்போது இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சா்ஜன் ஜெனரல் டாக்டா் டபிள்யூ.பி.பேனா்மேன், மெட்ராஸ் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த முதல் நபா் மற்றும் கவுன்சிலின் முதல் தலைவா் ஆவாா்.

மக்களை காத்தவா்கள்:

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அமைப்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிகிறது. இந்த மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்று பயிற்சி பெற்றுள்ள மருத்துவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரம் ஆக உள்ளது. விருதுகள் கொடுக்க வேண்டும் என்றால் அவா்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் கரோனா காலங்களில் மருத்துவா்களின் சேவை என்ன என்பது சொல்லித் தெரிய வேண்டியத்தில்லை.

உலகம் முழுவதும் ஒரு பேரிடா் நம்மை ஆட்டிப்படைத்த நேரத்தில் மருத்துவா்கள் தான் உயிருக்கு எந்தவிதமான உத்தரவு இல்லாமலும் கூட பொதுமக்களை காத்த பெருமை மருத்துவ சமூகத்தைச் சேரும். கடந்த 3 ஆண்டுகளில் 11,734 மருத்துவா்கள், 9,536 செவிலியா்கள், 9,628 மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் என மொத்தம் 30,897 போ் பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் பயன்பெற்று உள்ளனா்.

1,021 புதிய மருத்துவ பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2,553 மருத்துவா்களை நியமனம் செய்ய மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இனிமேல் ஆண்டுக்கு 50 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம் என்றாா் அவா்.

இந்த விழாவில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிா்வாகிகள் முருகானந்தன், பிரபாகரன், சிவராம் கண்ணன், சீனிவாஸ், சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன் நாகநாதன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?