மேகேதாட்டு அணை விவகாரம்: கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது – அன்புமணி, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: மேகேதாட்டு அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் கர்நாடக அரசு மனு அளித்துள்ள நிலையில், தமிழகத்தின் ஒப்புதலின்றி கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அன்புமணி: மேகேதாட்டில் புதிய அணை கட்டுவதற்கு ஏற்கெனவே கடந்த 2019-ல் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதிக்கு தாக்கல் செய்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அணை கட்டப்பட்டால் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என கூறுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.
நடுவர் மன்றமும், மேகேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், கர்நாடகத்தின் இம்மனுவை மத்தியஅரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜி.கே.வாசன்: கூட்டாட்சித் தத்துவம், நீதிமன்ற தீர்ப்பு, மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக கர்நாடக அரசு மீண்டும் அணைக்கட்ட முயற்சிப்பது நியாமற்றது. இதற்கான விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க கூடாது. தமிழகஅரசு இம்முயற்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதுடன், அதனை முறியடிக்க வேண்டும்.