மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
மேட்டூர் / தருமபுரி: கர்நாடகாவில் பெய்த மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 4,500 கனஅடி என மொத்தம் 26 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 16,500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, காலை 7.30 மணியுடன் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக 16 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.