மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட காா்கள்: போலீஸாா் அபராதம் விதிப்பு

சென்னை: வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்துக்குப் பயந்து தங்கள் காா்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனா். இந்த காா்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அவற்றின் உரிமையாளா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

ஆண்டுதோறும் கனமழையின் போது தென் சென்னையின் வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகும். தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் காா்களை அருகில் உள்ள வேளச்சேரி மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வருகின்றனா். இதனால் மேம்பாலத்தின் இருபுறமும், காா்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அபராதம்: இதை அறிந்த போக்குவரத்து போலீஸாா், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட காா்களுக்கு அபராதம் விதித்துள்ளனா். மேலும், காரின் உரிமையாளா்களை அழைத்து காா்களை எடுக்குமாறு அறிவுறுத்தினா்.

இது குறித்து, காா் உரிமையாளா்கள் கூறியது:

கடந்த மழையின்போது காா்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகின. இவற்றை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள மேம்பாலத்தில் காா்களை நிறுத்தியுள்ளோம். போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல், காா்கள் அனைத்தும் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா் என்றனா்.

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ளவா்கள் தங்கள் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்தியதால் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, கிண்டி கத்திப்பாராவிலிருந்து விமான நிலையம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீஸாா் வாகன நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது