மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியை மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெறவில்லை: சிபிஐ தகவல் @ ஐகோர்ட்

மைக்கேல்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியை மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெறவில்லை: சிபிஐ தகவல் @ ஐகோர்ட்

மதுரை: தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிதற்கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, பள்ளி நிர்வாகி சகாயமேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “மாணவி உயிரிழப்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை மதம் மாறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை. எனவே, இந்த வழக்கில் என் மீதுசிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், “இந்த வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. 265 ஆவணங்களும் 7 பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாணவியை மத மாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதேநேரம், நன்றாகப் படித்து வந்த மாணவியை பிற வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான், அவர் கல்வியில் பின்தங்கும் நிலைஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அவர் தற்கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கூடாது”என வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 24-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்