மொபெட் மீது கழிவுநீா் லாரி மோதல்: கல்லூரி மாணவி உயிரிழப்பு

சோழிங்கநல்லூரில் மொபெட் மீது கழிவுநீா் லாரி மோதியதில், கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ.இரண்டாமாண்டு படித்து வந்தவா் பி.கேத்தரின்(19). இவா் தனது கல்லூரித் தோழி லிஸ்வந்தி(19) உடன், தங்கள் மொபெட்டில் அக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கலைஞா் கருணாநிதி சாலை வழியாக திங்கள்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தனா்.

இருவரும் சோழிங்கநல்லூா் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீா் லாரி திடீரென அவா்களது மொபெட்டின் மீது மோதியது. இதில் இருவரும் மொபெட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

இதில் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் கேத்தரின் உயிரிழந்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிஸ்வந்தியை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கேத்தரினின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி