மோசடியாக நிலம் விற்கப்பட்ட விவகாரம்: காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடிகை கவுதமி ஆஜர்

மோசடியாக நிலம் விற்கப்பட்ட விவகாரம்: காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடிகை கவுதமி ஆஜர்

காஞ்சிபுரம்: தனது நிலம் மோசடியாக விற்கப்பட்ட விவகாரத்தில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

நடிகை கவுதமி மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தனது உதவியாளராக இருந்த அழகப்பன் என்பவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தை அழகப்பன் பேருக்கு சுங்குவார் சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கவுதமி பவர் உரிமையும் செய்து கொடுத்துள்ளார். ஆனால், அழகப்பன் தனது நண்பர்களான ரகுநாதன், சுகுமாரன் மற்றும் பலராமன் ஆகியோருடன் சேர்ந்து மேற்படி சொத்துகளை அபகரித்துக்கொண்டு அதற்கு உண்டான பணத்தையும் தராமல் கவுதமியை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட நடிகை கவுதமி, அழகப்பன் தன்னை ஏமாற்றியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அழகப்பனை குற்றப்பிரிவு போலீஸார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி அழகப்பன் மனு தாக்கல் செய்திருந்தார். நடிகை கவுதமியும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வழக்கு குறித்தும், தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் விளக்கம் அளித்தார்.

இந்த வழக்கில் அழகப்பனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறை தரப்பிலும், நடிகை கவுதமி தரப்பிலும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக அழகப்பனை 5 நாள் காவலில் எடுக்கவும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகை கவுதமி புதன்கிழமை நீதிமன்றத்தில் திடீரென ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்