மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும் -மமதா பானர்ஜி

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ஆம் தேதி, பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு கடுந்தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024(மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள்) என்ற பெயரிலான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான புதிய மசோதா மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை(செப். 3) தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு கடுந்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளி பரோலில் சிறையை விட்டு வெளிவராத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களைத் தடுக்க அபராஜிதா! மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

மசோதா தாக்கல் செய்யப்படும் முன் சட்டப்பேரவையில் முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, “பாலியல் வன்புணர்வு மனிதாபிமானத்துக்கு எதிரானதொரு சாபம். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சமூக சீர்திருத்தங்கள் தேவை.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும், பிற மாநிலங்களுக்கான சிறந்த உதாரணமாகவும் அமையும். புதிய மசோதா, பாலியல் குற்றசாட்டுகளில் விரைந்து விசாரணை முடித்து நீது வழங்குதல் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுந்தண்டனை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றவுடன், பாலியல் குற்றங்களில் விரைந்து விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க காவல்துறையில் சிறப்பு செயற்குழு உருவாக்கப்படும்.

உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில், பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு நீதிமன்றங்களில் நீதி வழங்கப்படுகிறது” என்றார்.

இதனிடையே, மமதா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்கள் பேரவையில் முழக்கமிட்டனர். இதனைக் கண்டித்து பேசிய மமதா, “எனக்கெதிராக என்ன காரணத்திற்காக நீங்கள் முழக்கமிடுகிறீர்களோ, அதே காரணத்தை முன்னிறுத்தி பிரதமருக்கெதிராகவும், உள்துறை அமைச்சருக்கெதிராகவும் நான் முழக்கமிட வேண்டி வரும்” என்றார்.

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள பி.என்.எஸ் சட்டங்கள் குறித்து மேற்கு வங்க அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த மமதா பானர்ஜி, “மத்தியில் புதிய அரசு அமைந்ததும், புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள பி.என்.எஸ் சட்டங்கள் குறித்த விரிவான விவாதம் நடத்த வேண்டும்” என்றார்.

மேலும், இந்த மசோதாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்க, எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஆர். ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிபிஐ மூலம் நீதி கிடைக்க வேண்டும், அதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று மமதா பேசியுள்ளார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!