மோடி கேபினேட் : முக்கிய துறைகளை விட்டு கொடுக்காத பாஜக

மத்திய அமைச்சரவை : முக்கிய துறைகளை விட்டு கொடுக்காத பாஜக

பிரதமர் நரேந்திர மோடி, பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளார். உள்துறை அமைச்சராக அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக நிதின் கட்கரி இந்த முறையும் தொடர்கின்றனர்.

பாஜகவின் தேசிய தலைவராவதற்கு முன்பு தான் வகித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையுடன், ரசாயனம் மற்றும் உரத்துறையையும் ஜெ.பி.நட்டா பெற்றுள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறையும், அமைச்சர் ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறையும் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

புதிதாக அமைச்சரவைக்குள் வந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வேளாண் துறை அமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகானும், மின்சாரம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக மனோகர் லால் கட்டாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையும், தர்மேந்திர பிரதானுக்கு கல்வித்துறையும், அமைச்சர் சர்பானந்த சோனோவாலுக்கு கப்பல் போக்குவரத்து துறையும்,

அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையும் மாற்றமின்றி வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், அமைச்சர் ஹர்தீப் சிங் புரிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையும், அமைச்சர் வீரேந்திர குமாருக்கு சமூக நீதித் துறையும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

கடந்த ஆட்சியில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது தொலைத்தொடர்பு துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷி உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கிரண் ரிஜிஜூ இந்தமுறை நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், மன்சுக் மாண்டவியா தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், கிரிராஜ் சிங் ஜவுளித்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதே போல, கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத்தும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக கிஷன் ரெட்டியும் மாற்றப்பட்டுள்ளனர். கூட்டணி ஆட்சி என்றபோதும், முக்கியமான அனைத்து துறைகளையும் பாஜக தங்கள் வசம் தக்க வைத்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ராம் மோகன் நாயுடுவுக்கு சிவில் விமான போக்குவரத்துத் துறையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில்கள் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலன் சிங்-கிற்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறையும் பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வானுக்கு, அவரது மறைந்த தந்தை ராம் விலாஸ் பஸ்வான் வகித்த உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையே வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை இணை அமைச்சராக இருந்து தற்போது முதல் முறையாக கேபினட் அமைச்சராகியுள்ள அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மத்திய அமைச்சரான ஒடிசாவின் ஜூயல் ஓரம்-மிற்கு பழங்குடியினர் நலத்துறையும், முதல்முறையாக கேபினட் அமைச்சராகியுள்ள குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு ஜல் சக்தி துறையும் வழங்கப்பட்டுள்ளது. கேபினட் அமைச்சர்களிடம் சட்டத்துறை ஒதுக்கப்படாத நிலையில், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் வசம் சட்டம் மற்றும் நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறையைப் போலவே, தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் வசம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்டவையும், அமைச்சர் இந்தர்ஜித் சிங் வசம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியினரான சிவசேனாவின் பிரதாப்ராவ் ஜாதவ் ஆயுஷ் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சிங் சவுத்ரி திறன் மேம்பாட்டு துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த ஆட்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு…, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நிலையில், தற்போது, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையுடன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி, சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளின் இணை அமைச்சராகவும், அப்னா தளம் கட்சித் தலைவர் அனுப்ரியா படேல் சுகாதாரம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைச்சரவையிலேயே மிகப்பெரிய பணக்காரரான தெலுங்கு தேசம் கட்சியின் பெம்மசனி சந்திரசேகருக்கு ஊரக மேம்பாட்டு மற்றும் தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது விவகாரத்தில் தொடர்ந்து பிரச்னை நீடிக்கும் நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த வி.சோமண்ணா ஜல்சக்தி துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cabinet
,
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்