யானை சின்னம்: விஜய் மீது நடவடிக்கை எடுக்க பகுஜன் சமாஜ் மனு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது.

தவெகவின் கட்சிக் கொடியை நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான விஜய் கடந்த வாரம் அறிமுகம் செய்துவைத்தார். அந்தக் கொடி சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவெக கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு!

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியில் ஏற்கெனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அஸ்ஸாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்சிக் கொடியில் இடம்பெற்றிருந்த யானைகளை அகற்றவில்லை என்றால் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலருக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

“அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாகும். எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாகும்.

யானை சின்னமானது அம்பேத்கர் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்ட சின்னமாகும். யானை சின்னத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது. தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!