யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவு

உதகை: பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக உதகையில் தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூபரான சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீஸாரை பற்றி அவதூறாக பேசி கருத்து வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சவுக்கு சங்கர் மீது பெண் போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், உதகை அருகே உள்ள புதுமந்து காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த அல்லிராணி அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் போலீஸார் கடந்த மே 7-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கடந்த 28-ம் தேதி கைது செய்த நீலகிரி மாவட்ட போலீஸார் 30-ம் தேதி உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் முன் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், திங்கட்கிழமை (இன்று) சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி தமிழ் இனியன் உத்தரவிட்டார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்