ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

“சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில்(ஆர்டா) ரத்தக் கசிவு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளாமல் எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி, ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் முடிக்கப்பட்டதை அவரின் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு, கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக உடல்நலத்தில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், நேற்று இரவு, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா என்ற கோணத்திலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்தன.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி: இதய நாளத்தில் என்ன பிரச்னை?

இந்த நிலையில், இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் கசிவு இருந்ததாகவும், ஸ்டென்ட் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது அவரது 170வது படமாகும். அடுத்து 171வது படமாக கூலி உருவாகி வருகிறது. அண்மையில் கூட ரஜினி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு கடந்தவாரம்தான் சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!