தமிழக அணியின் 2-வது இன்னிங்சில் விஜய் சங்கர் சதம் அடித்து அசத்தினார்.
கோவை,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 3-வது லீக்கில் தமிழ்நாடு- சத்தீஷ்கார் அணிகள் (டி பிரிவு) இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சத்தீஷ்கார் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சத்தீஷ்கார் 169.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 500 ரன்கள் குவித்தது. சத்தீஷ்கார் தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பாண்டே 124 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் ஆண்ட்ரே சித்தார்த் 55 ரன்கள் எடுத்தார். சத்தீஷ்கார் தரப்பில் சுபம் அகர்வால் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் பாலோ ஆனை சந்தித்த தமிழகம் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சுரேஷ் லோகேஷ்வர் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லோகேஷ்வர் 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் களம் இறங்கினார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் தனது 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் அடித்திருந்தது. தமிழகம் தரப்பில் ஜெகதீசன் 28 ரன்களுடனும், ஆண்ட்ரே சித்தார்த் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழக அணி தரப்பில் ஜெகதீசன் 60 ரன்களிலும், சித்தார்த் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நிலைத்து விளையாடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிரதோஷ் ரஞ்சன் பால் 39 ரன்கள் அடித்தார். 76 ஓவர்கள் முடிவில் தமிழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. அபாரமாக விளையாடிய விஜய் சங்கர் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.