ரத்தக் கறை, 200 ஆதாரங்கள்: நடிகர் தர்ஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில், ரத்த வெள்ளத்தில் இருக்கும் புகைப்படம் உள்பட 200 ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக, நடிகர் தர்ஷனுக்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவித்ரா கௌடாவின் செருப்பில் ரத்தக் கறை இருந்தது உள்பட பல ஆதாரங்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனுக்கு எதிராக காவல்துறை இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் தர்ஷன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரேணுகாசாமி (33) என்ற ஆட்டோ ஓட்டுநர், பெங்களூருவில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்தியதில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். பவித்ரா குறித்து ரேணுகாசாமி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதால், இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை 200 ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. தர்ஷன் உடை மற்றும் சில குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உடைகளில் ரத்தக்கறை உள்பட பல தடயவியல் ஆதாரங்களும் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுகாசாமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அவரை பவித்ரா தனது காலணியால் அடித்திருக்கிறார். அப்போது அதில் ரத்தக் கறை ஒட்டியதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பொறியாளராக இருந்து காவலரான ஹீரோ!

இந்த வழக்கில் முக்கிய கதாநாயகனாக இருந்திருப்பவர் காவல்துறை துணை ஆணையர் கிரிஷ் என்று தகவல்கள் வெளியாகின. இவருடன் விஜயநகரம் – காவல்துறை உதவி ஆணையர் சாந்தன் குமாரும் இணைந்து மிகப்பெரிய கும்பலை பிடித்திருக்கிறார்கள்.

அதாவது, ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர், ரேணுகாசாமி கொலை வழக்கில், நான்கு பேர் நேராக காவல்நிலையம் வந்து சரணடைகிறார்கள். வழக்கமாக என்ன நடந்திருக்கும். அவர்கள் கொலை குற்றவாளிகள் என்று வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காவல் ஆணையர் கிரிஷ் அவ்வாறு செய்யவில்லை. காரணம், இதுபோன்று சரணடையும் விவகாரங்கள் ரௌடிகளின் கொலையின்போதுதான் நடக்கும். ஆனால், ரேணுகாசாமியோ ரௌடி அல்ல.

எனவே, கிடைத்த நால்வரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரேணுகாசாமிக்கும் இந்த நால்வருக்கும் எந்த தொடர்பும் இல்லை ஒருவருக்கு ஒருவர் சந்தித்ததே இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சிறைக்குச் செல்ல பெரிய தொகை வழங்கப்படுவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பணத்தைக் கொடுக்க முன்வந்தது யார் என்பதுதான் கேள்வியானது. ஒருபக்கம் அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்த வினாய் பற்றி விசாரணையும், மறுபக்கம், காவல்நிலையத்துக்கு போன் செய்து சரணடைவதற்கான விவரங்களை கேட்டவரின் விவரங்களும் அலசப்பட்டது.

விசாரணையில்தான் வினய், நடிகர் தர்ஷனின் நெருங்கிய உதவியாளர் என்பது தெரிய வந்தது. வினய்யை காவல்துறை சுற்றிவளைத்து. பிறகு குற்றம் நடந்தது எப்படி என அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை