வேலூர்: காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார் (55). இவர் திருப்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க |தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் 1039 ஆவது சதய விழா
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் நின்று புறப்பட்ட மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் நடைமேடைக்கு எதிர் திசையில் இருந்து ஏற முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் புறப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த செந்தில்குமார் ரயில் சக்கரத்தில் சிக்கி தனது இரண்டு கால்களை இழந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து அவரது உடல் உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.