ரயிலில் படுக்கை கழன்று விழுந்ததில் பயணி பலி!

ரயிலில் படுக்கை கழன்று விழுந்ததில் பயணி பலி!எர்ணாகுளம் – நிஜாமுதீன் வரை செல்லும் மில்லினியம் அதிவிரைவு ரயிலில் விபத்து.கோப்புப்படம்

நிஜாமுதீன் சென்று கொண்டிருந்த ரயிலில் படுக்கை கழன்று விழுந்ததில் 61 வயதுடைய பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மேல் படுக்கையில் இருந்த பயணி சரியாக படுக்கை சங்கிலியை மாட்டாமல் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாக ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் வரை செல்லும் மில்லினியம் அதிவிரைவு ரயில் (12645) ஜூன் 15-ஆம் தேதி புறப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியை சேர்ந்த அலி கான் (வயது 61) எஸ் 6 பெட்டியில் நெ. 51 கீழ் படுக்கையில் பயணித்துள்ளார்.

இந்த ரயில், மாலை 6 மணியளவில் தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, நடுப்படுக்கை கழன்று அலி கானின் மீது விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக ராமகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் வாரங்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து கேரள காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவின் கீழுள்ள ரயில்வேவின் நிலை:

போதுமான ரயில்கள் அல்லது இருக்கைகள் இல்லை. நீங்கள் பாதுகாப்பாக ரயிலில் ஏற முடியாது, ஏறினால் இருக்கை இல்லை, இருக்கை கிடைத்தாலும் விபத்து அல்லது சுகாதாரமின்மை போன்றவற்றால் நீங்கள் கொல்லப்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் நடு இருக்கையில் இருந்த பயணி சரியாக சங்கிலியை மாட்டாததுதான் என்றும், நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் படுக்கையின் உறுதித்தன்மை சரிபார்த்ததில் நன்றாக இருந்ததாகவும் ரயில்வே அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

நாள்தோறும் ரயில் தொடர்புடைய விபத்துகள் அரங்கேறி வருவது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு