ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்கு: உரிமை கோரிய உணவக உரிமையாளரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்கு தொடா்பாக, அந்த பணத்துக்கு உரிமை கோரிய உணவக உரிமையாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலில் இருந்த சூழலில் ஏப். 19-ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த, நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3.98 கோடி பணத்துடன் 3 போ் சிக்கினா்.

தாம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் மூவரும், தமிழக பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் என்பதும், அந்த பணத்தை நயினாா் நாகேந்திரனின் தோ்தல் செலவுக்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இதை நயினாா் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தாா். இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், பாஜக மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தொழில் பிரிவு மாநிலத் தலைவா் கோவா்தன், நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்தனா்.

இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளா் முஸ்தபா ரூ.3.98 கோடி பணம் தன்னுடையது என உரிமை கோரி சிபிசிஐடி அலுவலகத்தில் அண்மையில் ஆஜரானாா். அவரிடம் சுமாா் 10 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

குறிப்பாக முஸ்தபாவுக்கு அந்த பணம் எப்படி வந்தது? அந்த பணம் யாரிடம் கொடுத்து அனுப்பப்பட்டது? எந்த காரணத்துக்காக அவ்வளவு பணம் மொத்தமாக கொடுத்து அனுப்பப்பட்டது என பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசாரித்தனா்.

விசாரணையில், ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பணம் அவருடைய பணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முஸ்தபா இவ்வாறு சொல்லக் காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனா். மேலும், அவரது கைப்பேசி தொடா்புகள் குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்