ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை -கமலா ஹாரிஸ் திட்டவட்டம்!

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது.

உக்ரைன் போர், மத்திய கிழக்கில் காஸா, லெபனான், ஈரானுடன் இஸ்ரேலின் மோதல் போக்கு என போர் மேகம் சூழ்ந்துள்ள சவாலானதொரு காலகட்டத்தில் உலகின் முன்னணி வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, உலக நாடுகள் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

தேர்தலுக்கு இன்னும், ஒரு மாதத்துக்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஆளுங்கட்சியின்(ஜனநாயகக் கட்சி) வேட்பாளர் கமலா ஹாரிஸும், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும்(குடியரசுக் கட்சி) படுதீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்றபின், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக, நேரடி கேள்விக்களம் நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அவரை தொகுப்பாளர் அலெக்ஸ் கூப்பர் பேட்டியெடுத்தார். அப்போது கமலா ஹாரிஸிடம் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், உக்ரைன் போர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள கமலா ஹாரிஸ், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் இருதரப்பு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்று திட்டவட்டாமாக தெரிவித்துள்ளார். “உக்ரைன் எதிர்காலம் குறித்து உக்ரைன்தான் முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கவும் மறுத்துவிட்டார். “அதற்கான தருணம் வரும்போது, இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படுமென” அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, ரஷியாவின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “டொனால்டு டிரம்ப் இந்நேரம் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், ரஷியா உக்ரைன் தலைநகரையும் ஆக்கிரமித்திருப்பதுடன், மாஸ்கோவை விட்டுவிட்டு புதின் கீவ் நகரில் இருந்திருப்பார்” என்றும் பொருள்படக் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்த துணை அதிபர் கமலா ஹரிஸ், அந்நாட்டிற்கான தொடர் ஆதரவு அளிக்கப்படுமென்பதை மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“உக்ரைனுடன் நிற்பது பெருமையாக இருப்பதாகவும், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கப் போவதாகவும், உக்ரைன் பாதுகாப்பாகவும், வளமையாகவும் இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து செயல்படப் போவதாகவும்” கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்