ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு!

ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு!ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவர்படம் | பிரதமர் மோடி எக்ஸ் தளப் பதிவு

ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய குடிமக்கள் அனைவரையும் விடுவிப்பதாக ரஷியா முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா – ரஷியா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா சென்றுள்ளார் பிரதமர் மோடி. ரஷிய அதிபா் புதினுடன் மோடி இன்று(ஜூலை 9) பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் இதுகுறித்த முழுவிவரம் வெளியாகுமென தெரிகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், உக்ரைன் மீதான போர் தொடங்கியதைத் தொடர்ந்து, ரஷிய ராணுவத்தில் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் நடைபெறும் பகுதிகளில் ரஷிய ராணுவத்துக்கு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷியாவிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை அந்நாட்டின் ராணுவத்திலிருந்து விடுவிப்பது தொடர்பாகவும், ரஷியாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ரஷியாவின் இத்தகைய நடவடிக்கைகள் இருநாட்டு கூட்டாண்மைக்கு இசைவாக இல்லை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்கோவில் திங்கள்கிழமை(ஜூலை 8) அதிபர் புதினுடனான இரவு விருந்தின்போது, மேற்கண்ட விவகாரத்தை புதினிடம் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுவரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் 10 இந்தியர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்