ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் வழக்கு

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 148 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளை கைப்பற்றியது. அதே சமயம் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதே போல் அங்கு மொத்தம் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 20 இடங்களை கைப்பற்றியது. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 'எக்ஸ்' தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் 'பாரத் சினிமா' என்ற பெயர் கொண்ட பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஒடிசா மாநில காங்கிரஸ் சார்பில் சம்பந்தப்பட்ட பதிவை வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள கொலை மிரட்டல் பதிவில், 'ராகுல் காந்தி ஒடிசாவுக்கு வந்தால் நாதுராம் கோட்சேவாக மாறிவிடுவேன்' என்று அந்த நபர் பதிவு செய்துள்ளார் எனவும், இது தொடர்பாக காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்