ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதி: சிவசேனை எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

மும்பை: "இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வது தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன்' என்று சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சஞ்சய் கெய்க்வாட் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது இந்தியாவில் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்திவிட்டது.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை ராகுல் காந்தியின் பேச்சு உணர்த்துகிறது. இவ்வாறு கருத்து கூறியதற்காக ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு நான் ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன்.

அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவரான அம்பேத்கரை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் தோற்கடித்தது.

ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கை துரோகமாகும். மராட்டியர்கள், தங்கார்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் இடஒதுக்கீட்டுக்காகப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அவர் அரசமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி, "அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக முயற்சிக்கும்' என்று தவறான கருத்தைக் கூறுவது வழக்கம். ஆனால், உண்மையில் இந்த நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லத் திட்டமிடுவது காங்கிரஸ் கட்சிதான் என்று சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார்.

எனினும், சஞ்சய் கெய்க்வாடின் கருத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாஜக கூறியுள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கருத்து தெரிவிக்கையில் "ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்தவர் நாட்டின் முதல் பிரதமரான நேரு ஆவார்.

அது தேசத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

இடஒதுக்கீடு வழங்குவது என்பது முட்டாள்களை ஆதரிப்பதாகும் என்று முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கூறினார். தற்போது இடஒதுக்கீட்டை தாம் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார்' என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கருத்து தெரிவிக்கையில் "ராகுல் காந்தி குறித்து கருத்து கூறியுள்ள சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாடுக்கு சமூகத்திலும், அரசியலிலும் இருப்பதற்குத் தகுதி இல்லை' என்றார்.

காங்கிரஸ் கட்சி எம்எல்சி}யான பாய் ஜக்தாப் கூறுகையில் "இதுபோன்ற நபர்களையும், கருத்துகளையும் நான் கண்டிக்கிறேன். இவர்கள் இந்த மாநிலத்தின் அரசியலை சீரழித்துவிட்டனர்' என்று குற்றஞ்சாட்டினார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்