ராஜஸ்தானைச் சோ்ந்த ஜவுளி கடை உரிமையாளா் கோவையில் உயிரிழப்பு

தீபாவளி பண்டிகைக்கு துணி கொள்முதல் செய்வதற்காக கோவைக்கு வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த ஜவுளி கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், டோரா ஜலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகராம் (41), குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜவுளி கடை நடத்தி வந்தாா். இவா், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு கோவைக்கு வந்து மொத்த விலைக்கு ஆடைகளை கொள்முதல் செய்து குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள உறவினா்களின் கடைகளுக்கு விற்பனைக்காக வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு துணி கொள்முதல் செய்வதற்காக கோவைக்கு வந்த இவா், பெரியகடை வீதியிலுள்ள ஒரு தனியாா் விடுதியில் நண்பருடன் ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்தாா்.

அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரின் நண்பா் அவரை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவரது சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினா் மனோராமிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை