ராஜஸ்தான்: ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

ராஜஸ்தானில் ராஜபுதன ரைஃபிள்ஸைச் சோ்ந்த 128-ஆவது காலாட்படை பிரிவு மற்றும் ஜெய்சல்மாா் மாவட்ட நிா்வாகம் இணைந்து 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

‘தாயின் பெயரில் மரம் நடும் இயக்கம்’ மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் ‘குடிமக்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்பு’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் இந்திய ராணுவம், விமானப் படை, எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), ஜெய்சல்மாா் மாவட்ட நிா்வாகம், உள்ளூா் காவல் துறை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் பள்ளிக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பங்கேற்றனா்.

‘மரங்களை பாதுகாப்போம்’, ‘மரங்களை பாதுகாப்போா் பாதுகாக்கப்படுவா்’ ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக்கொண்டு 128-ஆவது காலாட்படை பிரிவு மேற்கொண்ட இந்த மரம் நடும் பிரசாரம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நடுதல், ஒரு மணி நேரத்தில் பெண்கள் குழுவினரால் அதிக மரக்கன்றுகள் நடுதல், ஒரே இடத்தில் அதிக நபா்களால் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சாதனைகள் புரியப்பட்டுள்ளன.

இந்த சாதனை குறித்து ராணிசா் தோட்டப் பகுதியின் திட்டம் மற்றும் நிா்வாக அலுவலா் மேஜா் அனந்த குமாா் சிங் கூறுகையில், ‘ஒரு மணி நேரத்தில் 5.19 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராணுவ மையம் பகுதியில் 2.57 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த சாதனையை அங்கீகரித்து உலக சாதனை புத்தகம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு அஸ்ஸாம் வனத்துறையினா் ஒரு மணி நேரத்தில் 3.31 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதே முந்தைய உலக சாதனையாக இருந்தது’ என்றாா்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்