ராஜிநாமா செய்வாரா சித்தராமையா? கர்நாடகத்தில் என்ன நடக்கிறது?

சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடா ஊழல் வழக்கு

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதியின் 3.16 ஏக்கா் நிலத்தை வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியிருந்தது.

இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில் தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்றார் ஆளுநர்.

சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17ஏ, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா 2023 பிரிவு 218-இன்படி முதல்வா் சித்தராமையா மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் ஆக. 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக சித்தராமையா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஆக. 19 ஆம் தேதி இந்த வழக்கு முதல்முறையாக விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறியது.

இதையும் படிக்க | சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து வழக்கின் இன்றைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

'ஆளுநர் தவார்சந்த் கெலாட்டின் செயல்பாடுகளில் எந்தத் தவறும் இல்லை. அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்க முகாந்திரம் உள்ளது' என்று கூறியுள்ளார்.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து முதல்வர் சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்தினர்.

மேலும் நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பதவி விலக பாஜக வலியுறுத்தல்

சித்தராமையா உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர் பதவிக்கான தகுதியை சித்தராமையா இழந்துவிட்டார் எனவும் அவர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜகவும் தனது எக்ஸ் பக்கத்தில், காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று பதிவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முடா ஊழல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் சித்தராமையா அறிக்கை

இதனிடையே முதல்வர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'விசாரணைக்கு நான் தயங்கமாட்டேன். சட்டப்படி இதுபோன்ற விசாரணை அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். அடுத்த சில நாட்களில் உண்மை வெளிவரும், 17ஏ-யின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்றும் நான் நம்புகிறேன். இந்த சண்டையில் உண்மைதான் வெல்லும்.

இது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான எங்கள் நீதிப் போராட்டம். காங்கிரஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனக்கு ஆதரவாக நின்று, சட்டப் போராட்டத்தை தொடர ஊக்குவித்து வருகின்றனர்.

ஏனெனில் நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் என் மீது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சித்தராமையா வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

துணை முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'முதல்வர் ராஜிநாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. இது பாஜகவின் அரசியல். நாங்கள் முதல்வருடன் துணை நிற்கிறோம். அவருக்கு ஆதரவு அளிக்கிறோம். அவர் நாட்டுக்கும் இந்த மாநிலத்துக்கும் கட்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்' என்று கூறியுள்ளார்.

அரசியல் குழப்பம்

கர்நாடக ஆளுநர், மத்திய பாஜக அரசு சொல்வதைச் செய்யும் தலையாட்டி பொம்மை என்றும் அவர் அந்த பதவியில் இருக்கத் தகுதிஇல்லை என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஒருபுறம் கூற, மற்றொரு புறம், சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கர்நாடக அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதே முதல்வர் யார் என்ற கேள்வி எழும்பியது. சித்தராமையாவுக்கும் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இறுதியாக முதல்வர் பதவிக்கு சித்தராமையாவும் துணை முதல்வர் பதவிக்கு டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனால் சித்தராமையா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடவாய்ப்பு அதிகமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!