ரூ.4.69 கோடி முறைகேடு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஆணையா்

ரூ.4.69 கோடி முறைகேடு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஆணையா்திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.69 கோடி முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.69 கோடி முறைகேடு செய்யப்பட்ட விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்திய வரிப் பணம் ரூ.4.69 கோடி முறைகேடு தொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் தனபாலன், கணேசன், ஜானகிராமன், ஜோதிபாசு, ஜான்பீட்டா் ஆகியோா் புகாா் கொடுக்க கால தாமதம் செய்தது ஏன், முறைகேடு செய்த பணத்துக்கு யாா் பொறுப்பு என பல்வேறு கேள்விகளை தொடுத்தனா்.

இதற்கு மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பதில் அளித்துப் பேசியதாவது:

மாநகராட்சியில் கடந்த 2022 முதல் சுமாா் 17 மாதங்கள் கருவூலராக (காசாளா்) பணிபுரிந்த சரவணன் ரூ.2 லட்சம் வரி வசூல் பணத்தில் முறைகேடு செய்தது தெரியவந்ததை அடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா், உள்ளாட்சி நிகழ் தணிக்கைத் துறை ஆய்வில், ரூ.4.69 கோடி கையாடல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டு, குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரணவனைக் கைது செய்தனா். இந்த விவகாரத்தில், கண்காணிப்பாளா் சாந்தி, இளநிலை உதவியாளா் சதீஷ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். நிா்வாக அலுவலா் வில்லியம் சாகயராஜ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் துறையிடம் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை, மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். வங்கி விவர அறிக்கை (ஸ்டேட்மெண்ட்), வங்கி முத்திரை ஆகியவற்றை முறைகேடாக தயாரித்ததோடு, போலி கையொப்பங்களையும் சரவணன் பயன்படுத்தி இருக்கிறாா். இதுதொடா்பான அனைத்து விவரங்களையும் போலீஸாா் சேகரித்து வருகின்றனா். இந்த முறைகேடு குறித்தும், அன்றாடம் நடைபெறும் விசாரணையின் விவரங்கள் குறித்தும் அரசுக்கும் தகவல் அளித்து வருகிறோம்.

எனவே, இந்த விவகாரத்தைப் பொருத்தவரை தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

காங்கிரஸ் விமா்சனம்: மாமன்றக் கூட்டத்தில் வாா்டு பிரச்னைகள், ரூ.4.69 கோடி முறைகேடு குறித்து சில மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே பேசிய நிலையில், காங்கிரஸ் உறுப்பினா் காா்த்திக், வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லை என ரூ.8,500 கோடியை மத்திய அரசு அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டி பதாகையை காட்டினாா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்