ரேஷனில் ஜூலை மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: தமிழக அரசு 

ரேஷனில் ஜூலை மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: தமிழக அரசு

சென்னை: கடந்த ஜூலை மாதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: “தமிழக அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜூலை மாதம் பெறலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, ஜூலை மாதம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜுலை மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக கடைகளுக்கு அனுப்பப்படாததால், குடும்ப அட்டைதாரர்களால் ஜுலை மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை. ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் இந்த ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு