ரேஷனில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், பயோமெட்ரிக்கை உறுதி செய்து உணவு தானிய விநியோகத்தில் கசிவு ஏற்படாமல் பயனாளிகளுக்கு முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அரசுக்கும், அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதனால் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரும் முறை வந்தது. ஆனால், அரிசி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ரேஷனில் பொருட்கள் வழங்கும் முறையை அனுமதிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதியது.
இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தருவதற்கு பதிலாக நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்வது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ரவி ரஞ்சன் அனுப்பிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த 03.10.2024 தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு பொருட்களை வழங்கிட அனுமதி கோரி கடிதம் அனுப்பியது. அதை அனுமதிக்கிறோம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு பதிலாக நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக விநியோகிக்க புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு முக்கிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
நேரடி பண பரிமாற்றத்துக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரேஷனில் பொருட்கள் தரும்போது பயோமெட்ரிக்கை உறுதி செய்யவேண்டும். திட்டத்தை செயல்படுத்த திட்ட அமலாக்க முகமை தேர்வு செய்யப்படவேண்டும். ரேஷனில் உணவு பொருள் விநியோகத்தில் நியாயமான வெளிப்படையான முறையை கடைபிடிக்கவேண்டும்.
உணவு தானியங்கள் விநியோகத்தில் எங்கும் கசிவு ஏற்படாமல், முழுமையாக பயனாளிகளுக்கே முறையாக விநியோகிக்க வேண்டும். உணவு தானியங்களின் தரத்தை உறுதிப்படுத்த வலுவான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டும். இத்திட்டத்துக்கான நிதியை புதுச்சேரி அரசு நிதி ஆதாரங்களில் இருந்து ஏற்கவேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.