ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!

குடும்ப அட்டையில் பெயர் நீக்கத்துக்கு புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சமீபமாக குடும்ப அட்டையில் பெயர் நீக்கக் கோரிய விண்ணப்பங்கள் அதிகம் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் ஒரு புதிய நடைமுறையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது அவசியம்.

அந்தவகையில் குடும்பத்தில் ஒருவரின் இறப்பினால் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்க வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும். திருமணமானவர்கள் என்றால் திருமணச் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனை ஆன்லைனிலும் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் வந்தால் சான்றிதழ்கள் இருக்கும்பட்சத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது குடும்ப அட்டையில் பெயரை நீக்க அதிகாரிகள் நேரடி சரிபார்ப்பு முறையை மேற்கொள்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள்/ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து சரிபார்த்து பெயர் நீக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றனர். இதில் தவறான தகவல்கள், தவறான விண்ணப்பங்கள் காரணமாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் விண்ணப்பத்தின் அடிப்படையில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்கள், பல குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தற்போது குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கு அதிகாரிகள் நேரில் களச் சரிபார்ப்பு முறை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேரடி சரிபார்ப்பு நடைமுறையில் இருந்தாலும், அவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவில்லை, இறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன.

இதையும் படிக்க | முட்டையின் மஞ்சள்கருவை சாப்பிடக்கூடாதா?

புதிய குடும்ப அட்டை

ஓராண்டுக்குப் பிறகு, புதிய குடும்ப அட்டை வழங்கும் பணியை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2023 முதல் 2.9 லட்சம் விண்ணப்பங்களில் 1.3 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திருமணமானவர்கள் புதிய குடும்ப அட்டை பெற, திருமணப் புகைப்படங்கள் இருந்தாலே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது திருமணச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுபோல, திருமணப் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்காதபட்சத்தில், குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரேஷன் பொருள்களைப் பெற திருமணச் சான்றிதழ்கள் அவசியம் என்பது முன்பிருந்தே உள்ளது.

விவாகரத்து, தத்தெடுத்தல் தவிர இதர விவகாரங்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் மட்டுமே இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஏனெனில் ஒரு சில பெற்றோர், தனிப்பட்ட பிரச்னைகளால் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை குடும்ப அட்டையிலிருந்து நீககிவிடுகின்றனர் என்றார்.

இதையும் படிக்க | அம்பத்தூரில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்படுமா?

தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் டி.சடகோபன் இதுகுறித்து பேசுகையில், 'குடிமக்கள் சாசனத்தின் கீழ் ரேஷன் பொருள்களைப் பெறுவதற்கு திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அத்தியாவசிய ஆவணமாகப் பட்டியலிடப்படவில்லை. இந்த திடீர் நடைமுறையால் விண்ணப்பதாரர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது' என்றார்.

மகளிர் உரிமைத் தொகைக்காக புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பிக்கும் பெண்களும் இந்த நடைமுறை சிரமமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் டி.மோகன் கூறுகையில், 'சில நேரங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தனி ரேஷன் கார்டுகளைப் பெற பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளதால், விண்ணப்பங்களை சரிபார்க்க திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், பழங்குடியினர், பின்தங்கிய பகுதிகளில் இதனை நாங்கள் வலியுறுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் அதுபோன்ற ஆவணங்களைப் பெறுவது கடினமாக இருக்கலாம். இறப்பு தொடர்பாக பெயர் நீக்குவதில் நேரடி சரிபார்ப்பு நடைமுறை தொடருகிறது' என்றார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது