ரோகித் சர்மா அப்படி செய்திருக்க கூடாது – சல்மான் பட் கருத்து

சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள கூடிய இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது தடுமாறுவதாக சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் அக்சர் படேலை (44 ரன்கள்) தவிர்த்து மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்றவர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா பினிஷிங் செய்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். அத்துடன் சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவர்கள் என்ற வரலாற்றை கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது இலங்கையிடம் தடுமாறுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய கிரிக்கெட்டின் சமீப கால வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு எதிரான ஆட்டம் கட்டுக்கோப்பாக இல்லை. இந்திய அணியின் டாப் வீரர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறுகின்றனர். இருப்பினும் அப்போட்டியில் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் ஆட்டத்தை முடித்திருக்க கூடியவர் என்றால் அது அவர்களின் கேப்டன் ரோகித் சர்மா. 64 ரன்கள் அடித்த பின் அவர் தன்னுடைய அணி தடுமாறுவதாக உணர்ந்து ரிவர்ஸ் ஷாட் அடித்தார். இருப்பினும் நல்ல பார்மில் இருப்பதால் ரோகித் சர்மா அப்படி அடித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த ரன்களை அடிக்க முடியாத அளவுக்கு இலங்கையின் பவுலிங் அற்புதமாக இருந்ததாகவும் எனக்கு தெரியவில்லை. எனவே மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன நடந்தது என்பதை புரிந்து விளையாடவில்லை. மறுபுறம் அது டி20 போட்டி அல்லது இலக்கு பெரியதாக இருந்தால் ரோகித் அப்படி ஒரு ஷாட்டை அடித்து அவுட்டானால் பரவாயில்லை. ஆனால் இலக்கு குறைவாக இருந்த போது நல்ல தொடக்கத்தை கொடுத்த நீங்களே நீண்ட நேரம் என்று போட்டியை முடித்திருக்கலாமே?" எனக் கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி