ரோஸ்டன் சேஸ் அதிரடி: பப்புவா நியூ கினியாவை வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணி

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.

கயானா,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டி தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பப்புவா நியூ கினியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டோனி உரா மற்றும் அசாத் வாலா ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி உரா 2 ரன்னிலும், அடுத்து வந்த லேகா சியாக்கா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து செசெ பாவு, அசாத் வாலா உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் அசாத் வாலா 21 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து களம் இறங்கிய ஹிரி ஹிரி 2 ரன்னிலும், சார்லஸ் அமினி 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து கிப்ளின் டோரிகா களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய செசெ பாவு அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பப்புவா நியூ கினியா தரப்பில் அதிகபட்சமாக செசெ பாவு 50 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரசல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் பிராண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சார்லஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக பிராண்டன் கிங்குடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் நிகோலஸ் பூரன் 27 ரன்களும், அவரைத்தொடர்ந்து பிராண்டன் கிங் 34 ரன்களும், அடுத்து களமிறங்கிய ரவ்மேன் பவல் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக ரோஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ரூ ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில் ரோஸ்டன் சேஸ் 42 (27) ரன்களும், ஆண்ரூ ரசல் 15 (9) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. பப்புவா நியூ கினியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆசாத் வாலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்மூலம் பப்புவா நியூ கினியா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட்இண்டீஸ் அணி, உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்