லஞ்ச வழக்கில் சிக்கும் அரசு ஊழியர்கள்.. நடப்பது என்ன?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகளின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிக்க.. ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

அதன்படி, 2023 – 24ஆம் ஆண்டில் 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குறைந்தது 100 ஊழியர்கள், அதிகாரிகள் மீது வழக்குகள் பதியப்படுகின்றன.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ராமகிருஷ்ணன், எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஊரக வளர்ச்சித்துறையால்தான் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் துறை அதிகாரிகள் சிலர், ஊரகப் பகுதியைச் சேர்ந்த மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். எனவே, மாநில அரசு, இந்த திட்டங்கள் குறித்து தமிழில் விவரங்களை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, லஞ்சம் கொடுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டாலும், தண்டனை பெறுவது என்னவோ குறைவுதான் என்றும் அவர் கூறுகிறார்.

இது மாற வேண்டும் என்றால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆதாரத்துடன் புகார் கொடுக்கும் மக்களின் குறைகளையும் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

இது குறித்து சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறுகையில், அரசு ஊழியர்கள் மீது தொடரப்படும் வழக்குகள் விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம். ஏன் என்றால், அது நீண்ட நாள்களுக்கு நீடிக்கும், இதில், விசாரணைக் காலம் வரை, வேலை செய்யாமல் குற்றம்சாட்டப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 50 – 75 சதவீத ஊதியத்தைப் பெறுகிறார்கள், விசாரணை முடிந்ததும், தண்டனை விதிக்காவிட்டால், பிடித்த ஊதியத்தை நிலுவைத் தொகையாகக் கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. இதுபோலவே அதிக முறைகேடு நடக்கும் துறைகள் மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும், துறை ரீதியான நடவடிக்கையை அடுத்து, விரைவான தீர்ப்பு என்பதே இந்த சம்பவங்களில் அவசியமானதாக உள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி