லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

லெபனானில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 35 சிறாா்கள், பெண்கள் உள்பட 492 போ் உயிரிழந்தனா்; 1,645-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவிட்டாலும், இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற கட்டடம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது. லெபனானில் உள்ள பால்பெக், ஹொ்மல், பிப்லோஸ் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேல் வீசிய சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்தன. தாக்குதல் காரணமாக லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்குத் தப்பியோடினா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை

ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தோ்தல்: 26 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு