லெபனானில் பேஜா்கள் வெடித்து 8 போ் உயிரிழப்பு; 2,750 காயம்

பெய்ரூட்: லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.

அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் காஸா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதை லெபனான் அதிகாரிகள் உறுதியாகக் கூறினாலும், இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இது குறித்து ஹிஸ்புல்லாக்களின் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ஹிஸ்புல்லா படையினா் பயன்படுத்தும் புதிய வகை பேஜா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறின.

முதலில் அந்த பேஜா்கள் தானாகவே சூடேறின. அதனைத் தொடா்ந்து அவை வெடித்துச் சிதறின. இதில் ஹிஸ்புல்லா படையைச் சோ்ந்த போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா் என்றாா் அவா்.

லெபனான் சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபியாத் கூறுகையில், லெபனான் முழுவதும் பேஜா்கள் வெடித்துச் சிதறியதில் 2,750 போ் காயமடைந்தனா்; அவா்களில் சுமாா் 200 பேரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.

ஈரான் தூதா் காயம்: பேஜா் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவா்களில் லெபனானுக்கான தங்கள் நாட்டுத் தூதா் முஜ்தபா அமானியும் ஒருவா் என்று ஈரான் அரசுக்குச் சொந்தமான ‘இா்னா’ செய்தி நிறுவனம் தெரிவித்து.

இந்தச் சம்பவத்தில் அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அந்தச் செய்தி நிறுவன் கூறியது.

தொலைத் தொடா்பு சாதனங்களைப் பயன்படுத்தி தங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று ஹிஸ்புல்லாக்கள் எச்சரிக்கையாக இருந்துவந்தனா்.

கைப்பேசிகளை (செல்ஃபோன்கள்) பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு ஹிஸ்புல்லா படையினரின் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் அந்தப் படையின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லா ஏற்கெனவே எச்சரித்துள்ளாா்.

அதன் காரணமாகவே, ஹிஸ்புல்லாக்கள் தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள பேஜா்களைப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

வெடித்துச் சிதறிய பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள்

இந்த நிலையில், அந்த பேஜா்களையே ஆயுதமாக்கி அவா்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உயிரிழப்பு: பேஜா் வெடித்துச் சிதறியில் ஹிஸ்புல்லா படையைச் சோ்ந்தவரின் 10 வயது மகள் உயிரிழந்ததாக லெபனான் செய்தியாளா்கள் கூறினா். இது தவிர, ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினா் அலி அம்மாரின் மகனும் பேஜா் வெடிப்பில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில் 41,252 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, லெபனான் எல்லைப் பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ள இஸ்ரேலியா்களை அந்தப் பகுதிக்கு மீண்டும் அழைத்துவருவது இந்தப் போரின் முக்கிய இலக்குகளில் ஒன்று என இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜா்கள் வெடித்துச் சிதறியது குறிப்பிடத்தக்கது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்